நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’, ஹரீஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' போன்ற திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக தனது தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தை இயக்கிவருகிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஊட்டியில் பனிசூழ்ந்த சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கிடையே 30 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியதாகவும் கடும் பனிப்பொழிவின் காரணமாகப் படப்பிடிப்பை முடித்துவிட முடியுமா என சந்தேகம் இருந்தததாகவும் தெரிவித்தார். ஆனால் நடிகர்கள் பிந்து மாதவியும், தர்ஷனாவும் அர்ப்பணிப்போடு நடித்தனர் எனவும் கூறினார். படக்குழுவிலிருந்த அனைவரின் ஒத்துழைப்பால்தான் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
படத்தின் கதையில் இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள் எனவும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும், அதை எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்படத்தில் இரு சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
இதையும் படிங்க: நல்லதே நினைங்க... 'பஞ்சராக்ஷரம்'- மக்களின் கருத்து என்ன?