இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
விழா மேடை ஒன்றில் ரஜினி, "பாலசந்தர் சார் என் கண்ண பார்த்துதான் என்ன தேர்ந்தெடுத்தாங்க. அவன் கண்ல என்னவோ இருக்கு, சும்மா அப்டி பார்த்தான் சொன்னா எதோ இருக்குப்பானு சொல்வார். அந்த கண்ண வச்சுதான் நான் உங்களையெல்லாம் சம்பாதிச்சேன்" என பேசியிருப்பார்.
ஒரு நடிகனுக்கு கண்கள் என்பது அவ்வளவு முக்கியம், கண்களின் மூலம் பார்வையாளர்களுக்கு உணர்வுகளை கடத்தி விடுவார்கள். அந்த வகையில் இயக்குநர் பாலசந்தர் சொன்னது போலவே ரஜினியின் கண்களில் ஒரு காந்தவிசை இருக்கிறது. அதுதான் இத்தனை ஆண்டுகாலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை அவர் வசம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.
பாட்ஷா படத்தில் தங்கச்சியை வில்லன் ஒருவன் அடிக்கும் காட்சியில் ரஜினியின் கண்களுக்கு க்ளோஸ் ஷாட் வைத்திருப்பார்கள். அதுவரை இயல்பாக இருக்கும் ரஜினி, அந்தக் காட்சியில்தான் முதன்முதலாக கோபப்படுவார், அதைக் கண்களின் மூலமாகவே உணர வைப்பார்.
தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவு ரஜினிக்கு க்ளோஸ் ஷாட் அதிகமாக வைக்கப்பட்டிருக்கும். ரஜினி அணிந்திருக்கும் உடை கூட நடிக்கும், ரஜினி பூட்ஸ் காலுக்கு ஷாட் வைப்பதை பல இயக்குநர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ‘பாட்ஷா பாரு’ பாடல் ரஜினியின் பூட்ஸ் சத்தத்தோடுதான் தொடங்கும். ‘கபாலி’ படத்திலும் ரஜினியின் பூட்ஸுக்கு தனியாக ஷாட் வைத்திருப்பார்கள். ஏனென்றால் ரஜினி என்பது ஈர்ப்பு...
அவ்வளவுதான் ரஜினி கதை முடிஞ்சு போச்சு... இத 40 வருசமா சொல்லிட்டு இருக்காங்க
கமர்ஷியல் படத்தில் நடிப்பதற்காக ரஜினியை ஒரு க்ரூப் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ போன்ற முத்தான படங்களையும் தந்திருக்கிறார். ரஜினியின் அரசியல் பார்வை மீது வெறுப்புள்ளவர்கள் தொடர்ந்து ரஜினி படங்களை புறக்கணிப்போம் என ஒவ்வொரு படம் வெளியாகும்போது கூறி வருகிறார்கள். சிலர் அவர் உடல்நலன் மீது அக்கறை கொண்டவர்களாக, அவருக்கு ஓய்வு தேவை என்கிறார்கள். ஆனால் ஹாலிவுட்டில் தனது இறுதி மூச்சுவரை நடிக்கும் நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ரஜினி திரைத்துறையை விட்டு விலக வேண்டும் என நினைப்பவர்களுக்கு ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஒரு பதிலளித்திருப்பார். அதில் அவர், ‘லிங்கா’ ரொம்ப எதிர்பார்த்த படம், சரியா போகல. ‘கோச்சடையான்’ அதுவும் சரியா போகலைனு சொல்லவும், அவ்வளவுதான் ரஜினி கதை முடிஞ்சுபோச்சு, இத 40 வருசமா சொல்லிட்டு இருக்காங்கன்னு பேசியிருப்பார்.
தற்போது ‘தர்பார்’ பட செகண்ட் லுக்கை கலாய்ப்பவர்கள், படம் வெளியாகும்போது டிக்கெட் வாங்க முன்வரிசையில் நிற்பார்கள் அல்லது டிக்கெட் கிடைக்காமல் அலைந்துகொண்டிருப்பார்கள். அதுதான் ரஜினி..