தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார், தலைவர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த பெயர் 'ரஜினி'. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் இவரது செல்வாக்கு உலகம் முழுவதிலும் பரவிக்கிடக்கிறது.
பிளாக் அண்டு ஒயிட், கலர், டிஜிட்டல், 3டி என பல பரிமாணங்களில் பயணித்த ரஜினிகாந்த் 70ஆவது வயதில் 168 படங்களில் நடித்திருக்கிறார். போட்டி நிறைந்த திரையுலகில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் ரஜினி இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
திரையுலகில் வில்லன், கதாநாயகன், சூப்பர் ஸ்டார் என புகழ்மாலை சூட்டிய இவரது வாழ்க்கைப்பயணத்தில் அரசியல் என்பது வெறும் வார்த்தையாகவே இருக்கிறது. இன்று நேற்றல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஜினியின் அரசியல் தமிழ்நாட்டு மண்ணுக்கு எதையோ சொல்ல விரும்புகிறது.
தமிழ்நாடு அரசியலில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப்பிறகு ரஜினியின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பட்டாசு போல வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கின்றன. ரஜினி என்ன பேசினாலும் அது அன்றைய விவாதப்பொருளாக மாறிப்போய் அரசியலாகிவிடுகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் வந்து விட்டது என்று, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என அவரே பலமுறை சொல்லிவிட்டார். படத்தில் பேசும் வசனங்களைப் போல அவரும் நீண்ட நெடுங்காலமாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன் என கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார் ரஜினி.
1996ஆம் ஆண்டிலேயே பதவி என்னை தேடி வந்தது. மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும் என அவர் பேசிய மேடைப் பேச்சுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. அரசியலில் இறங்குவது நடுக்கடலில் இறங்கி முத்து எடுப்பதற்கு சமம். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என ரஜினியின் இப்படிப்பட்ட அரசியல் பேச்சுக்கள் இன்றளவும் பேசுபொருளாகவே இருந்துவருகின்றன.
ரஜினி சமீபத்தில் பேசிய போது, 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்திருந்தார். அதன் படி கட்சி ஆரம்பித்து, 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக மகுடம் சூட்டுவாரா, எதிர் நீச்சல் அடித்து களத்தில் பல ஆண்டுகளாக நின்று ஆலமரமாக இருக்கும் இருதுருவங்களான அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகளுக்கிடையே நிலவும் போட்டியை சமாளிப்பாரா என்ற கேள்விகளின் பதிலுக்கு இன்னும் ஒன்றறை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
2021ஆம் ஆண்டு தேர்தல்களம் பலமுனைப் போட்டியை ஏற்படுத்தும் தருவாயில் ரஜினி அதற்கு முன்னதாக கட்சி ஆரம்பித்து களப்பணிகளில் இறங்கி செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. இந்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், ரஜினியின் கட்சி அறிவிப்பு பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை என்ற நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக கட்சி ஆரம்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.
ரஜினி என்ன பேசுவார் என அவரது ரசிகர்கள் மட்டும் காத்திருக்கவில்லை காலமும்தான்.
#HBDRajinikanth அன்றும்..இன்றும்..என்றும் ரஜினி 'தனி வழி' கொண்ட தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!