பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் இயக்குநரும், நடிகருமான ரா. பார்த்திபன் தயாரித்து இயக்கி, தனி ஒருவனாக நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. படம் முழுவதும் ஒரே கதாபாத்திரமாக பார்த்திபன் மட்டுமே தோன்றும் வித்தியாசமான படமாக தயாராகியுள்ளது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - ராம்ஜி. இசை - சந்தோஷ் நாராயணன். ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம். அத்துடன், ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடக்கும் தெற்கு ஆசிய சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படம் கலந்து கொள்ளவுள்ளது.
தமிழ் சினிமாவில் சாதனை முயற்சியாக பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்கு பிரபல நடிகர்கள், இயக்குநர்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அமீர்கான், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மலையாள டாப் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் குறித்து கூறியதாவது,
பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப் டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் கூறியதாவது,
ஏற்கனவே ஒற்றைப் கதாபாத்திரமாக படம் முழுவதும் வந்த ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பார்த்திபனும் இணைந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூறியதாவது,
நண்பர் பார்த்திபனின் தனித்துவம் மிக்க திரைப்பட சோதனை முயற்சி இது என்று தெரிவித்துள்ளார்.
புதிய முயற்சிக்கு புதிய பாதை அமைத்துள்ளார் பார்த்திபன் என்று மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிர்கான் கூறியதாவது,
வழக்கத்துக்கு மாறான மிகப் புதிய முயற்சி இது. இதைப்பற்றி பேசுவதற்கே பரவசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் கூறியதாவது,
யாருமே பயணப்படாத புதிய பாதையில் பயணப்படுவது பார்த்திபனுக்கு கைவந்த கலை. எங்களைப் போன்ற நடிகர்கள் செய்ய பயப்படுவதை அவர் எளிதாகச் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் கூறியதாவது,
இதுதான் தனி மனித சாதனை. 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த செருப்பு யாருடையது என்பதைத் தெரிந்து கொள்ள முயலும்போது ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது என்றார்.