சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்றுள்ள பாடும் நிலா மறைந்தது சொல்லொணாத் துயரை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "இன்று எல்லோருக்கும் ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிடம் வரை உயிருக்காகப் போராடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நம்மை விட்டுப்பிரிந்தார். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ரொம்ப நல்ல மனிதர், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு பார்க்காத நேசமானவர்.
இந்தியாவில் எத்தனையோ பிரபலங்கள் உருவாகியுள்ளனர். ஆனால், எஸ்பிபி போல் எவரும் இல்லை. அனைத்து மொழிகளையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். நீங்கள் பல ஆண்டுகளாக என் குரலாக இருந்தீர்கள். உங்கள் குரலும் உங்கள் நினைவுகளும் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும். உங்களது இனிமையான, கம்பீரமான குரல் நூறு ஆண்டுகள் வரையும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அந்தக் குரலுக்குச் சொந்தமானவரை கொண்டாட, மகிழ்ச்சி பெற நம்முடன் அவர் இல்லை. அவரைப் பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காலத்தை வென்ற காந்தக் குரல் - பாடும் நிலா பாலு