மும்பை: அதிகாலை பூஜையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் ரிலீஸை மும்பை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மும்பை சயான் பகுதியில் ரஜினி மகாராஷ்டிரா மன்றத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தர்பார் பட ரிலீஸை ஆரவாரமாகக் கொண்டாடினர். ரஜினியின் 68 அடி உயர பேனர் முன்பு மேளதாளத்துடன் நடனமாடிய ரசிகர்கள், அதனை அந்தப் பகுதியிலுள்ள பிவிஆர் திரையரங்கம் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
பின்னர் ரசிகர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பூஜையும் நடத்தப்பட்டது. தர்பார் படம் வெற்றிபெற வேண்டியும், ரஜினி நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டியும் பூஜை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரஜினியின் பேனருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. சயான் பகுதியில் தர்பார் ரிலீஸாகி இருந்த அரோரா திரையரங்கத்தில் திருவிழா போல் இந்த நிகழ்வு நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், காலை 6 மணிக்கு படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.
"ரஜினிகாந்த் மிகவும் மனிதநேய மிக்கவர். தனது வாழ்க்கையை எளிமையாகத் தொடங்கி தற்போது வெற்றிபெற்ற மனிதராக இருக்கிறார். அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர். நாங்கள் அவருக்கு கடமைபட்டுள்ளோம்" என்று ரசிகர் மன்றத்தினர் கலகலப்பான கொண்டாட்டத்துக்கு இடையே தெரிவித்தனர்.