சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பூ, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து கிட்டதட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, இசைக்கோர்ப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட வேலைகளில் இயக்குநர் சிவா, அவரது குழுவினர் இறங்கியுள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் கரோனா காரணமாக தடைபட்டு சமீபத்தில் முக்கிய காட்சிகள் எடுத்துமுடிக்கப்பட்டது. படத்தின் ஒரு முக்கிய சண்டைக்காட்சி மட்டும் எடுத்துவிட்டால் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஆனால் அதனை ஐரோப்பாவில்தான் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் வினோத் உறுதியாக இருப்பதால் தாமதமாகி வருகிறது.
மேலும் இந்தப்படம் குறித்தான எந்த அறிவிப்பையும் இதுவரை தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை. இதனால் சமூகவலைதளத்தில் படக்குழுவினரிடம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் எஞ்சியுள்ள படப்பிடிப்பிற்கு வலிமை படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
![Movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-valimai-annathe-fight-script-7205221_23062021145127_2306f_1624440087_58.jpeg)
இதனையடுத்து இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வலிமை படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தாமதம் ஆவதால் வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் வெளியிட படக்குழு ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வலிமையும் அன்றைய தினமே வெளியிட்டால் ரஜினி படமும் அஜித் படமும் இரண்டாவது முறையாக மோதுகிறது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் 'பேட்ட' படமும் அஜித்தின் 'விஸ்வாசம்' படமும் மோதியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்றிய அரசின் அனுமதி பெற்று அமெரிக்கா பறக்கும் ரஜினி?