ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் இயங்கிவரும் சிவாஜி, விஜய் சினிமாஸ் உள்ளிட்ட மூன்று திரையரங்குகளில் தர்பார் படத்தின் சிறப்புக் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில், பேனர் கலாசாரத்தை நிறுத்தி தர்பார் படத்திற்கு கட்அவுட், பேனர்கள் வைப்பதை அங்குள்ள ரசிகர்கள் நிறுத்தியுள்ளனர். அதன்படி, ரஜினி ரசிகர் மன்ற வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ஜி. கணபதி தலைமையில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கட் அவுட்டுகள், பேனர்களுக்குப் பதிலாக காய்-கனிகளாலான இயற்கைப் பந்தலை அமைத்து வித்தியாசமான முறையில் தர்பார் படத்தை வரவேற்றனர்.
பேனர் கலாசாரத்தை அறவே நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரசிகர்கள் அனைத்து வகையான காய்-கனிகளைப் பயன்படுத்தி பிரமாண்டமாகப் பந்தல் அமைத்துள்ள சம்பவம் அங்குள்ள பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.
ரசிகர் மன்ற காட்சியைக் காணவந்த ரசிகர்கள், பார்வையாளர்கள் இந்த இயற்கை காய்கனி பந்தலை ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.