ரஜினி - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரதிக் பப்பார், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குகிடையே இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி, இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர், ’பாண்டியன்’ படத்திற்கு பின் ஏன் நீங்கள் போலீஸ் வேடத்தில் நடிக்கவில்லை? ஏன் எந்த இயக்குநரும் அதுபோன்ற கதையுடன் உங்களை இயக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், வெளிப்படையாக சொல்ல வேண்டும்மென்றால் போலீஸ் வேடத்தில் நடிப்பது எனக்கு பிடிக்காது.
காரணம் அந்த வேடத்தில் நடித்தால் சீரியஸான கதாபாத்திரமாக இருப்பதோடு, கிரிமினல்களை சந்திப்பது போன்று நடிக்க வேண்டும். எனக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் என்பதால் போலீஸ் கதைகளை தவிர்த்துவிடுவேன்.
ஆனால், இயக்குநர் முருகதாஸ் நல்ல போலீஸ் கதையுடன் வந்ததால் இப்படத்தில் நடித்தேன். மூன்று முகம் படத்தில் இடம்பெற்ற என்னுடைய அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் இப்படத்தில் உள்ள ஆதித்யா அருணாச்சலம் கேரக்டர் அதுபோன்று நல்ல வரவேற்பைப் பெறும். வழக்கமான போலீஸ் கேரக்டராக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு போலீஸ் அதிகாரியாக என்னை முருகதாஸ் இப்படத்தில் காண்பித்துள்ளார். அதை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள் என்றார்.
இதையும் படிங்க: குடிபோதையில் போலீஸை அறைந்த நடிகையின் சகோதரர் மீது வழக்குப்பதிவு