'பேட்ட' படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினியின் 166வது படமாகும். லைகா புரொடெக்சன்ஸ் சார்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் போட்டோ ஷூட் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் தலைப்பிற்காக காத்திருக்கும் ரஜினியின் ரசிகர்கள், தற்போது போட்டோ ஷூட் நடைபெறுவதால், ரஜினி எந்த கெட்டப்பில் இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும், இயக்குநராக இருந்து முழுநேர நடிகராக மாறியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் தீவிர ரசிகரான எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
எனவே ரஜினியின் 166வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.