சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராஜவம்சம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
'ராஜவம்சம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துகொண்டு படம் குறித்து பேசினர்.
விழாவில் படத்தின் ஹீரோ சசிகுமார் பேசியதாவது:
'ராஜவம்சம்' கூட்டுக்குடும்பத்தைப் பற்றி சொல்லும் படம். கூட்டுக்குடும்பத்தை தற்போது நாம் இழந்துள்ளோம். அந்த வகையில் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்.
சுமார் 40 கேரக்டர்கள் வரை இருந்ததால், கால்ஷீட், சம்பள பிரச்னை போன்றவற்றை கருத்தில்கொண்டு எல்லா கதாபாத்திரங்களையும் புதிய நடிகர்களைப் நடிக்கவைக்கலாமா என்ற யோசனை இருந்தது. ஆனால் கதை மீது இருந்த நம்பிக்கையால் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமானவர்களை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர் கூறினார்.
கூட்டுக்குடும்பத்துக்குள் சின்ன சின்னச் பிரச்னை இருப்பதுபோல் படப்பிடிப்பின் தொடக்க நாட்களில் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்களை சேர்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டப்பட்டோம். ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்திய படப்பிடிப்பு நடத்தியது இனிய அனுபவமாக இருந்தது.
நிக்கி கல்ராணி தனக்கான காட்சிகளை கேட்டு கேட்டு மிகவும் ஆர்வமாக நடித்தார். அனைவரையும் இயக்குநர் கதிர்வேலு சிறப்பாக கையாண்டர்.
தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ இவர்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 40 பேர் இல்லை ஆயிரம் பேரையும் அழைத்துச் செல்லலாம் என்றார்.
படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி பேசியதாவது:
நான் நகரத்தில் வளர்ந்து பெண். என் குடும்பத்தில் நான்கு பேர்தான். ஆனால் கிராமத்தில் இருக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நான் பார்த்ததில்லை. இதை ராஜவம்சம் படம் மூலம் அனுபவித்தேன்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 40 பேருக்கும் மேல் படப்பிடிப்பில் கலந்துகொண்டது இனிய அனுபவம்.
ஒரு குடும்பத்தில் சந்தோஷம், பிரச்னைகள், கடினமான நேரங்கள் இருப்பதுபோல் படப்பிடிப்பிலும் இருந்தது. படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குநர் கதிர்வேலு, சசிகுமார் மற்றும் தயாரிப்பாளர் ராஜா ஆகியோரின் அவர்களின் புரிதலும் ஒற்றுமையும்தான் காரணம்.
இவை எல்லாவற்றையும் மீறி சினிமா மீது நமக்கு இருக்கும் காதல்தான் இப்படியொரு படம் உருவாக வைத்துள்ளது என்றார்.
குடும்பத் திரைப்படமாக உருவாகியிருக்கும் ராஜவம்சம் திரைப்படத்தில் ராதாரவி, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, நிரோஷா, தம்பி ராமையா, மனோபாலா, இயக்குநர் ராஜ்கபூர், யோகிபாபு, ஓஏகே சுந்தர், நமோ நாராயணா, ஜெயப்பிரகாஷ், சாம்ஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
படத்துக்கு ஒளிப்பதிவு - சித்தார்த் ராமசாமி. இசை - சாம். சி.எஸ். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.