சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா ராதாரவியை கண்டித்து இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'நான் அறிக்கை கொடுப்பது குறைவு. ஏனென்றால் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் இன்று நான் என் நிலையை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலின வேறுபாடு செயல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்காகப் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். முதலில், ராதாரவியை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மு.க.ஸ்டாலினுக்கு என் உளமார்ந்த நன்றிகள். பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். இவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் எதிர்க்கிறேன்.
எனக்கெதிரான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன் என்று தெரிவித்த நயன்தாரா உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?' என்று நடிகர் சங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைதியாக இருந்த நயன்தாரா கண்டன அறிக்கை வெளியிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் ராதாரவியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.