'மின்னலே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். அதைத் தொடர்ந்து காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் என காதல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கினார்.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் விஜய்யை வைத்து ‘யோகன் அத்யாயம் ஒன்று’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. எனினும் அதன்பின் அந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது அப்படத்தின் கதையில் சில மாறுதல்கள் செய்து ‘ஜோஸ்வா அத்தியாயம்’ ஒன்று என்ற பெயரில் மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
இதில் சமீபத்தில் வெளியான பப்பி பட நாயகன் வருண் நடிக்கிறார். இதனை 'எல்கேஜி', 'கோமாளி', 'பப்பி' ஆகிய மூன்று படங்களை வெளியிட்ட வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக வருண் பாரிஸ் சென்று சண்டை கற்றுள்ளார். தற்போது அதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.
கௌதம் மேனன் கடைசியாக சிம்புவை வைத்து இயக்கிய அச்சம் என்பது மடமையடா படமும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இவர் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் தொடர்நது தாமதம் ஏற்பட்டுவருகிறது.
இது தவிர விக்ரமை வைத்து கௌதம் எடுத்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் எடுக்கப்படாமல் உள்ளது. இதனிடையே குயின் வெப் சீரிஸை இயக்கிக் கொண்டிருக்கும் கௌதம் மேனன் தற்போது அடுத்ததாக தனது பழையக் கதையை தூசி தட்டி எடுத்து இளம் நடிகரை வைத்து உருவாக்கிவருகிறார்.