டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ள படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 24 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான 'நீங்க முடியுமா', 'உன்ன நினைச்சு' பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான 'உயிரை உருக்கும்' மெலோடி சாங் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் வெளியான சில மணிநேரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் படம் குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'தர்பார்' படத்துடன் 'சைக்கோ' பட ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறுகையில், இப்படத்தின் பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்களானாலும் அவரே இசையின் ராஜா.
'சைக்கோ' படத்தில் வரும் பாடல்களின் சிம்பொனி கேட்டு மயங்கிப்போனேன். 'சைக்கோ' படத்தின் பாடல், டீஸர் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து இப்படத்தின் இந்த ட்ரெய்லரை படக்குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சிகொள்ளும் வகையில் 'தர்பார்' படத்தின் திரையிடலோடு இணைத்து வெளியிடுகிறோம். ஜனவரி 24 அன்று 'சைக்கோ' படத்தை திரைக்குக் கொண்டுவருகிறோம், ரசிகர்கள் நிச்சயம் படத்தையும் கொண்டாடுவார்கள் என்றார்.