பாலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக ஏ.ஆர். ரகுமான் தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக பல திரைப் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் கோலிவுட்டிலும் உள்ளது. நடிகர்களிடம் இருக்கிறதோ, இல்லையோ ஒரு சில தயாரிப்பாளர்களிடம் அது உள்ளது. அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கிவிட்டனர்.
தான் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கும் அந்தப் பிரபல தயாரிப்பாளர், தனது பலத்தால் சில தயாரிப்பாளர்களுடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார். ஹீரோக்களுக்கு போன் செய்து கெடுத்துவிடுவது, ஃபைனான்சியர்களைக் கலைத்துவிடுவது, படத்தைப் பற்றி கேவலமாகக் கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களுக்கு பீதியை உருவாக்குவது போன்ற வேலைகளை வெற்றிகரமாகச் செய்துவருகிறார்.
அதற்குச் சில தயாரிப்பாளர்கள் உடன்பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.