நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திரிஷாவின் 60ஆவது படமான இப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் நந்தா, வேலராமமூர்த்தி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரிஷா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சிவா, "தற்போது உள்ள காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களில் லாபம் வருகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அப்படி இருக்கும் சூழலில், நம்மை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்திருக்கும்போது கதாநாயகிகள் ஏன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.
படம் வெளியாகும்போதும் புரமோஷன் பணிகள் நடைபெறும். அப்போதும் திரிஷா கலந்துகொள்ளவில்லை என்றால், அவரது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைத் திருப்பித்தர வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ரேலா மருத்துவமனை விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சேரன்!