நிதி நிறுவனம் தொடங்குவதாகக் கூறி துளசி மணிகண்டன் என்பவரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மேனகா, நீதிமணி, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பண மோசடியில் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி வழக்கில் இராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும். அப்படி தவறினால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
தற்போது, இதுதொடர்பாக சினிமா பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று காரணமாக பொதுமக்களும், திரைத்துறையினரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சூழ்நிலையில் சில தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள், மற்றும் சமூக வலைதளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதற்காகவே இந்த அறிக்கை வெளியிடுகிறேன்.
தமிழ் திரைப்படம் உலகிற்கு தேசிய விருதுகள் திறமையான நடிகர்கள் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை வழங்கியுள்ளது எனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். எங்களது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் 'மகாமுனி' திரைப்படம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ரிலீஸானது.
நீதிமணி என்பவர் என்னை அணுகி 'மகாமுனி' திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று கேட்டார். அந்த வகையில் அவர் 2019ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ஆறு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு நீதிமணியின் 'Tarun Pictures' நிறுவனத்துடன் 'மகாமுனி' திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீதிமணி பகுதி தொகையாக இரண்டு கோடியே முப்பது லட்சம் மட்டுமே வழங்கினார். மீதமுள்ள மூன்று கோடியே தொன்னூற்று ஐந்து லட்சம் ரூபாயை பிறகு தருவதாகக் கூறி இன்றுவரை தராமல் ஏமாற்றிவிட்டார். மீதமுள்ள தொகையைத் தரவேண்டி நீதிமணி மீது சினிமாத் துறையின் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு மேற்கொண்டுள்ளேன். இந்நிலையில் நீதிமணியும் அவரின் நண்பர்களும் சேர்ந்து மூன்று கோடி மோசடி செய்துவிட்டதாக கூறி துளசி மணிகண்டன் என்பவர் புகாரளித்துள்ளார். என் மீதோ, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீதோ எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை.
ஒரு பொருளை விற்பனை செய்யும்போது அதை வாங்குபவரின் பின்னணி குறித்தும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்தும் நாம் ஆராய்வதில்லை. ஆகையால் "மகாமுனி" படத்தை சட்டப்படி முறையாக விற்பனை செய்ததை தவிர எனக்கும் நீதிமணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நீதிமணி மீது, துளசி மணிகண்டன் அளித்துள்ள புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாமல் என்னையும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தையும் இணைத்து என் புகைப்படத்தையும் பயன்படுத்தி நான் நிதி மோசடி விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி 300 கோடி ரூபாய் மோசடி என தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
உண்மைக்கு புறம்பான செய்திகள் என் நற்பெயருக்கு கலங்கும் ஏற்படுத்துவதோடு எனது வியாபாரத்தையும் பாதிக்கும் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை வெளியிட்டால் அந்த நிறுவனங்களின் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து மான நஷ்ட ஈடும் வழக்கும் தொடர்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா உறுதி!