கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடியில் தமிழ்ப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகும் ஏராளமான படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படமும் திரையரங்கில் வெளியாகி சில தினங்களிலேயே ஓடிடியில் வெளியானது.
இதனால் அதிருப்தி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர். அதன்படி தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிடும்போது திரையரங்கில் படம் வெளியிடப்பட்டு 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிடப்படும் என்று கடிதம் வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். இதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பு அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து நடத்தப்பட்ட கலந்தாய்வில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை வெளியிடும்போது எந்தவொரு கடிதமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் விநியோகஸ்தர்களிடமும் கொடுக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில் இதுசம்பந்தமாக கடிதம் கேட்டால் உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தினை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.