தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாரன். இவர் தமிழில், 'சத்தம் போடாதே', 'நினைத்தாலே இனிக்கும்', 'கனா கண்டேன்', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம் தமிழ், மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தனது மகளின் 6ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ப்ரித்விராஜ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ப்ரித்விராஜின் மகளின் பெயரில் போலி கணக்கு பக்கம் சமூகவலைதளப்பக்கத்தில் உருவாக்கப்பட்டது.

மேலும் இந்தப் பக்கங்களை ப்ரித்விராஜூம் அவரது மனைவி சுப்ரியாவும் நிர்வகிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்து. தற்போது இது போலியானது என ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், 'இந்தப் போலியான பக்கம் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தப் பக்கத்தை நாங்கள் நிர்வகிக்கவில்லை. ஒரு ஆறு வயது குழந்தைக்கு சமூகவலைதளப் பக்கத்தை உருவாக்குவதற்கான எந்தத் தேவையும் இல்லை. அவர் வளர்ந்ததும் அது குறித்து அவரே முடிவு செய்து கொள்வார். எனவே இதுபோன்றவற்றை நம்ப வேண்டாம்' என ப்ரித்விராஜ் பதிவிட்டுள்ளார்.