கடந்த புதன்கிழமை இரவு ’இந்தியன் 2’ படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது மின் விளக்குகளை தூக்கிச் செல்லும் ராட்சத கிரேன் கீழே விழுந்து, உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். இதுகுறித்து நசரத் பேட்டை காவல் துறையினர் லைகா நிறுவனம், கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகாரளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த, வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன்,” ஈவிபி ஃபிலிம் சிட்டி முன்னர் பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தபோது தொடர் விபத்துகள் நடந்தன. படப்பிடிப்புத் தளமாக மாற்றப்பட்ட பின்னரும் பிகில், காலா, தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளது.
இவ்வழக்கை உடனடியாக மத்தியக் குற்றப்பிரிவிற்கு மாற்றக்கோரி புகார் அளித்துள்ளேன். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீதும், ’இந்தியன் 2’ பட இயக்குநர் ஷங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், லைகா நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக பாமக தலைவர் ஜி.கே. மணியின் மகன் உள்ளதால் நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்குகிறது. லைகா நிறுவனம் படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி காப்பீடு செய்திருக்கிறது. இவற்றையெல்லாம் கண்காணிக்க மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்து காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது “ என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்தியன் 2' பட விபத்து: தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது!