ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் 'தொரட்டி'. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படக்குழு, செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது, இயக்குநர் மாரிமுத்து பேசுகையில், "தொரட்டி என்பதை ஆடு மேய்ப்பவர்கள், இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது தொரட்டி. சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கிறது. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைக் கதை. தயவு செய்து இதற்கு எந்த சாதி சாயமும் பூச வேண்டாம்" என்றார்.
தொடர்ந்து, தயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசுகையில், "தொரட்டி படம், பார்ப்பவர்களுக்கு இதமான பயணமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு அது சிரமமான பயணமாக இருந்தது. ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்ட பொருட்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச்சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் உழைத்தோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும். இப்படத்தை பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்ததுபோல இருக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைதான் நாங்கள் படத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது"என்றார்.
இதனையடுத்து பேசிய பாடலாசிரியர் சினேகன், "கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன. இங்கு அதை சொல்லத்தான் ஆட்கள் இல்லை. சேரன், அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுதிய மனநிறைவை இந்த படம்தாம் எனக்கு தந்திருக்கிறது. ஊரில் எங்க அப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்?
சென்னையை அண்ணாந்து பார்க்கக்கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன. மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம்கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது. இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது" என்றார்.
மேலும், கதாநாயகன் ஷமன் மித்ரு பேசுகையில், "1980களில் ராமநாதபுர மாவட்ட கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானதுதான் தொரட்டி படம். இயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்றார். மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு, தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு, நான் போனால் என் பின்னால் ஓடிவரும். அந்தளவிற்கு என்னோடு பழகிவிட்டது. நிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப்படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக்கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்" என்றார்.