திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதையொட்டி ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறந்த நடிகர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது சார்பாகவும், ஜனசேனா கட்சி சார்பாகவும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 45 வருடங்களாகத் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த ரஜினிகாந்த் அவர்கள், இந்த விருதுக்கு அனைத்து வகையிலும் தகுதியானவர்.

தமிழ், தெலுங்கு ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூத்த சகோதரர் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த, ‘பந்தி போட்டு சிம்ஹாம்’, ’காளி’ படங்கள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன. ரஜினிகாந்த் அவர்கள் மேலும் நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.