தமிழில் 'பூ', 'மரியான்', 'உத்தமவில்லன்' ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவருகிறார். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்தும் பேசியுள்ளார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் பார்வதி பெண்களை முன்னிறுத்தும் கதையில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.
மேலும், பெண்ணிய கருத்துகளை வலியுறுத்திவரும் பார்வதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் இயக்குநராக மாறப்போவதாக தெரிவித்திருந்தார்.
நடிகை ரீமா கல்லிங்கல் பார்வதியுடன் இணைந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து துணிச்சலுடன் கருத்து தெரிவித்து வருகிறார். பெண்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார்.
இந்நச் சூழலில் அவர் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'பார்வதிக்கு இயக்குநராவது போன்ற ஆசை எனக்கு கிடையாது; எனக்கு கதை எழுதுவதில்தான் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அவ்வாறு நான் கதை எழுத ஆரம்பித்தால் அந்தக் கதையை இயக்கும் முதல் உரிமை எனது தோழி பார்வதிக்குதான் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.