வாழ்க்கை போட்டு வைத்திருக்கும் பின்னல்களுக்குள் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. அப்படி மீறி எளிதாக வாழ வேண்டுமென்றால் இசையிடமும், கவிதையிடமும் உதவி கேட்கலாம். அப்படி உதவிக்கரம் நீட்டுபவர்கள் தேவதூதர்கள். அந்த தேவதூதர்கள் வரிசையில் கவிஞர் பழநிபாரதி ஒருவர்.
தமிழ் சினிமா ரசிகர்கள், கதாநாயகர்களை எந்த அளவு கொண்டாடுகிறார்களோ அதே அளவு கவிஞர்களையும் கொண்டாடுவார்கள். ஆனால் சில கவிஞர்களை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்.
சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையிலும் உனது பெயர் எழுதியிருக்கிறது என்பார்கள். அதுபோல் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் எழுதுபவரின் குணாதிசயம் எழுதப்பட்டிருக்கிறது.
இப்படி இருந்தால்தான் கவிஞர்கள் என்று சிலர் போட்டு வைத்திருக்கும் கோட்டினை கடந்தவர் அவர். சாதுவான முகம், எளிமையான குணம் என பழநிபாரதியின் குணாதிசியம் இருப்பதால்தான் அவரது வரிகளில் எளிமையும், அமைதியும், அளவான கொண்டாட்டமும் ததும்ப ததும்ப ஓடுகிறது.
எஸ்.ஏ. ராஜ்குமாருடனும், தேவாவுடனும் பழநிபாரதி நிகழ்த்திய ரம்யங்கள் ஏராளம். பூவே உனக்காக திரைப்படத்தில், ’மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்’ என்று அவர் எழுதியதில் எவ்வளவு உண்மை. கிராமத்து பக்கம் இன்றளவும் அந்த வரிகள் பலரது ரிங்டோனாக இருக்கிறது.
அதேபோல், தேவாவுடன் அவர் நிகழ்த்திய ரம்யங்களில் முக்கியமானது ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம். அந்தப் பாடலில், “தேடி உன்னை பார்த்து பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து சிந்தும் விழி நீரில் நான் மூழ்குகிறேன்”. அந்தப் பாடல் முழுவதுமே பழநிபாரதி காதலனின் தவிப்பை இயல்பான காதலோடு வெளிப்படுத்தியிருப்பார்.
பழநிபாரதியின் கொண்டாட்டம் திகட்டாத அளவில் இருக்கும். ரஹ்மான் இசையில் வெளிவந்த துள்ளல் பாடல்களில், ’நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி’ பாடல் முக்கியமானது.
அதற்கு ரஹ்மானின் இசை ஒரு காரணம் என்றால்; பழநிபாரதியின் வரிகளும் ஒரு காரணம். "நீ வெட்டி போடும் நகத்துல குட்டி நிலவு தெரியுதடி" போன்ற வரிகளை எழுதி இரண்டு சரணங்களிலும் அதகளம் செய்திருப்பார்.
இப்படி பழநிபாரதி பல இசையமைப்பாளர்களுடன் பணி செய்திருந்தாலும் அவர் ஈரம் இருக்கும் பூவாக பூத்து குலுங்குவது இளையராஜாவுடன் மட்டுமே.
வைரமுத்து, வாலிக்கு அடுத்ததாக பழநிபாரதிதான் இளையராஜவுக்கு பொருந்திப்போன கவிதை. ராஜாவின் இசை மண் வாசனையையும், மன வாசனையையும் கிளப்பும் பழநிபாரதியின் வரிகள் அளவான மழையாய் பெய்யும்.
இளையராஜாவுக்கு அவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே மிகச்சிறந்த தரத்தில் இருப்பவை. ஆனால் ராஜா பாட்டில் பழநிபாரதி ராஜபாட்டை நடத்தியது இரண்டு பாடல்களில். ஒன்று, ’வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது’. இரண்டு, ’இளங்காத்து வீசுதே’.
வானவில்லே வானவில்லே பாடலில், ’சாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா’, ’தேசம் எது பார்த்துவிட்டு மண்ணில் மழை விழுமா’ என்று கேள்வி கேட்டு அற்ப மனிதர்களின் முகத்தில் மை தெளித்திருப்பார்.
மனிதர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு தண்டனையாக இந்த உலகம் தனது இயக்கத்தை எப்போதோ நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் உலகம் இயங்குவதற்கான அச்சாணி எது என பார்த்தால் நிச்சயம் அது ஈரமும், மனதும் உள்ள மனிதர்கள்தான்.
அந்த அச்சாணியை இளங்காத்து வீசுதே பாடலில், அள்ளி அள்ளி தந்து உறவாடும் அன்னை மடி இந்த நிலம்போல சிலருக்குத்தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு என போகிறபோக்கில் அடையாளப்படுத்தியிருப்பார்.
திரைப்பாடல்களில் மட்டுமில்லாமல் கவிதைகளிலும் பழநிபாரதியின் பாதை வலுவானது. “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்”என்று அவரது ஒரு கவிதை போதும் சாதி அழுக்கு அப்பியிருக்கும் சமூகத்தை கிழித்தெறிய.
40 வருடங்களாக எழுத்துத் துறையில் இயங்கிவரும் பழநிபாரதிக்கு உண்டான இடமோ, அங்கீகாரமோ இன்றளவும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் தனது சாந்தமான முகத்தை மாற்றப்போவதில்லை.
கரும்பாறையாய் இருக்கும் பலரது மனதில் மயில் தோகையை விரித்து எண்ணத்தில் வண்ணம் பூசுவதை அவர் நிறுத்தப்போவதுமில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் பழநிபாரதி...