தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ராமநாராயணன் முரளி என்ற ராமசாமி, "மாநிலம் முழுவதும் நான்காயிரத்து 500-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உள்ளனர். அதில் ஆயிரத்து 307 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறோம்.
தற்போது கோயம்புத்தூரில் உள்ள 62 தயாரிப்பாளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்ட கோவை வந்துள்ளோம். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நான்கு அணிகள் போட்டியிடும் நிலையில் எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தங்களது அணி வெற்றி பெற்றால் சிறுகுறு திரைப்படத் தயாரிப்பாளர்களை பாதுகாப்பதே எங்களின் முக்கிய குறிக்கோள்.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு உறுதுணையாகவும் இருப்போம். கேளிக்கை வரிக்கு வரி விலக்கு அளிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம். படங்கள் ஆன்லைன் தளங்களில் வெளியாவதை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் திரையரங்கு அனுபவத்தை ஆன்லைன் தளங்களில் உணர முடியாது. ஆனால் தற்போதுள்ள சூழலில் ஆன்லைன் தளங்கள் இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகாமல் உள்ளது, அதனை வெளியிட நடவடிக்கைகள் மேற் கொள்வோம். செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை தொலைக்காட்சியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கடவுளுக்கு நன்றி; என் மூச்சு உனக்காக உள்ளவரை - மகள் குறித்து ஐஸ்வர்யா ராய்