சென்னை: திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருந்த படங்கள் ஓடிடிக்கு சென்றுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஓடிடியின் வரவு அதிகரித்தது. தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
கரோனா ஊரடங்கு முடிந்து கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு சில படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும், பொதுமக்கள் திரையரங்கு வர ஆர்வம் காட்டாததால் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் பொங்கலன்று வெளியான விஜய் நடித்த மாஸ்டர் படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்ததால், வசூலில் வெற்றிபெற்றது.

எனினும் சூர்யாவின் சூரரை போற்று, விஜய் சேதுபதியின் கபெ ரணசிங்கம், ஆர்ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிபெற்றன. ஓடிடி தளங்களின் வரவால் அதிர்ச்சி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 45 நாட்களுக்குப்பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருந்தாலும் ஓடிடியில் படங்கள் வந்துகொண்டுதான் இருந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திரையரங்குகளை மீண்டும் மூடும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர்களின் கவனம் மீண்டும் ஓடிடி பக்கம் திரும்பியது. படத்தின் முதலீடு மற்றும் தயாரிப்பாளரின் பணப்பிரச்னை ஆகியவையே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

ஆனால், இப்படி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் உள்ள எல்லா படங்களும் ஓடிடிக்கு சென்றதால், தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறந்தாலும் ரசிகர்களை வரவழைக்க எங்களுக்கு படம் இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் வருந்துகின்றனர்.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கரோனா காரணமாக பல மாதங்களாக திரையரங்குகள் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் பல்வேறு பொருளாதார பிரச்னையில் இருக்கிறோம். இந்தநிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியானால் எங்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.
திரையரங்கு திறக்கப்பட்டாலும் மீண்டும் சகஜ நிலை திரும்ப எப்படியும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். தற்போது முன்னணி நடிகரின் படமும் ரிலீஸ் இல்லை. தீபாவளிக்குதான் ரஜினியின் அண்ணாத்த வெளியாகிறது. அதற்கு முன் அஜித்தின் வலிமை வந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கை நினைத்துப் பார்ப்பார்கள். சங்க நிர்வாகிகள் இதுகுறித்து கலந்துபேசி நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்குகிறது சூர்யா 40 படப்பிடிப்பு