ஜாக்வின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தை நடிகர் ஜாரெட் லெடோ தடுக்க முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்று ஜோக்கர். இந்தக் கதாபாத்திரத்தில் ஹீத் லெட்ஜர், ஜிம் கேரி, ஜாரெட் லெடோ உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் பலரும் நடித்திருக்கின்றனர். ’சூசைட் ஸ்குவாட்’ படத்தில் ஜாரெட் லெடோ இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் ‘ஜோக்கர்’ திரைப்படம் தனக்கு வரும் என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் வார்னர் பிராஸ் நிறுவனம் அந்த வாய்ப்பை ஜாக்வின் பீனிக்ஸுக்கு வழங்கிவிட்டது.
’சூசைட் ஸ்குவாட்’ படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்தை ஜாரெட் கையாண்ட விதம் வார்னர் பிராஸ் நிறுவனத்துக்கு திருப்தியளிக்காத காரணத்தால்தான் ‘ஜோக்கர்’ பட வாய்ப்பு ஜாக்வின் பீனிக்ஸிடம் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும் வார்னர் பிராஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் பேசி ‘ஜோக்கர்’ படத்தை ஜாரெட் தடுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜாரெட்டின் உதவியாளர் இர்விங் அஸோஃப் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ‘சூசைட் ஸ்குவாட்’ படத்தில் தான் நடித்த பல காட்சிகளை வார்னர் பிராஸ் நிறுவனம் நீக்கிவிட்டதாகவும் அந்தக் காட்சிகளை வைத்தே ஒரு முழு ஜோக்கர் படத்தை உருவாக்க முடியும் என ஜாரெட் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஆர்தர் ஃப்ளெக் ஜோக்கரான கதை" - மனம் திறந்த இயக்குநர் டோட் பிலிப்ஸ்!