உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருதில் சிறந்த அயல்நாட்டு படங்கள் என்ற பிரிவு உள்ளது. ஹாலிவுட் தவிர பிற உலக மொழிகளில் உருவான படங்கள் இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு போட்டியிடும். இதில் போட்டியிட இந்தியா சார்பில் ஆண்டுதோறும் ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும்.
இந்த நிலையில், ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த 'சூப்பர் டீலக்ஸ்', 'வடசென்னை', 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தன. இதையடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கல்லி பாய் என்ற பாலிவுட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளிலிருந்து இதேபோல் படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த அயல்நாட்டுப் பிரிவில் தற்போது 93 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து 10 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் போட்டியிடவுள்ளன.
இந்த ஆண்டில் கானா, நைஜீரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாட்டு படங்களும் இந்தப் பிரிவில் களமிறங்கியுள்ளன. இதற்கு முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு 92 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.
சிறந்த அயல்நாட்டுப் படம் பிரிவில் போட்டியிடவுள்ள படங்களின் இறுதிப் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறுகிறது.