கொச்சி: மலையாளத்தில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் நடிகை நஸ்ரியா, புதிய தோற்றத்துக்கு மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு சிறிது காலம் முழுக்கு போட்ட நஸ்ரியா, கடந்த ஆண்டு வெளியான கூடே படத்தின் மூலம் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கணவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக டிரான்ஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார். அன்வர் ரஷித் இயக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், க்யூட்டான முகபாவனைகளால் ரசிகர்களை கொள்ளைக்கொண்ட நஸ்ரியா, தன் தலைமுடியை பாப் கட்டிங் செய்து, ஸ்டெயிடர்னிங் செய்துள்ளார். மேலும், அவரது முகங்கள் கொஞ்சம் கொழு கொழுவென மாறியுள்ளன. இந்தப் புதிய தோற்றத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறார்.
தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதைத்தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நி்க்காஹ் ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார்.
இவரது அழகாலும், நடிப்பாலும் கிறங்கிய ரசிகர்கள், தங்களது கனவுக்கன்னியாக நஸ்ரியாவை பாவித்தனர். அப்போது திடீரென அனைவருக்கும் ஷாக் தரும் விதமாக திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர், கடந்த ஆண்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இதையடுத்து நஸ்ரியா மீண்டும் தமிழுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.