இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய பிரிட்டிஷ் ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 24 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜேம்ஸ்பாண்ட்டின் கடைசி திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெக்டர்'. கடைசி நான்கு பாகங்களில் ஜேம்ஸ் பாண்ட்-ஆக டேனியல் கிரெய்க் நடித்துள்ளார்
ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 25ஆவது படமாக 'நோ டைம் டு டை' உருவாகியுள்ளது. இப்படம் இன்று (செப். 30) அமெரிக்கா தவிர உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இதிலும் ஜேம்ஸ் பாண்ட்டாக டேனியல் கிரெய்க் தனது மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில் ராமி மாலெக் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, ரால்ப் பெய்னெஸ், நவோமி ஹாரிஸ், ரோரி கிண்ணியர், லியா செய்டாக்ஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மெட்ரா கோல்ட்வைன் மேயர், யூனிவர்சல் பிக்சர்ஸ், இயான் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கியுள்ளார்.
2006இல் வெளியான 'கேசினோ ராயல்' என்ற படம் மூலம் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் முதல் முறையாகத் தோன்றினார் டேனியல் கிரெய்க். கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்ரே படங்களுக்கு அடுத்து இவர் நடித்துள்ள கடைசி பாண்ட் படமாக 'நோ டைம் டு டை படம்' அமைந்துள்ளது.
டேனியல் கிரெய்கின் கடைசி படமாக 'நோ டைம் டு டை' உள்ளதால் இப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த 'நோ டைம் டு டை' கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தொடர்ந்து மாற்றிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (செப். 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தங்களின் காத்திருப்பை 'நோ டைம் டு டை' பூர்த்திசெய்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இப்படம் அக்டோபர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.