ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நிசப்தம்’. தெலுங்கில் நிசப்தம் என்றும், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ’சைலன்ஸ்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரித்துள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 2ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நின்னே நின்னே என்று துவங்கும் இப்பாடல் மனதை வருடும் காதல் பாடலாக அமைந்துள்ளது. கோபி சுந்தர் இசையமைக்க, தெலுங்கில் சித் ஸ்ரீராம் இப்பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை பாஸ்கரபட்லா எழுதியுள்ளார்.
அதேபோல் தமிழில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’நீயே நீயே’ என்ற மெலடி பாடலை ஆலப் ராஜு மற்றும் மலையாளத்தில் மது பாலகிருஷ்ணன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலின் தமிழ் பாடல் வரிகளை கருணாகரனும், மலையாளத்தில் பி. கே. ஹரி நாராயணனும் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து இசையமைப்பாளர் கோபி சுந்தர் கூறுகையில், ”நிசப்தம் போன்ற த்ரில்லர் படத்தில் காதல் பாடல் இருப்பது கதையின் போக்கிற்கு இடைஞ்சலாக இருக்குமோ என நினைக்க வைக்கும். ஆனால் அதேநேரம், ’நின்னே நின்னே’ பாடலுக்கு கதையில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. படத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் சாக்ஷி மற்றும் அந்தோணி கதாபாத்திரங்களுக்கு இடையேயான இந்த காதல், இப்பாடலில் மிக அழகாக வெளிவரும். ரசிகர்கள் இந்தப் பாடலை ரசிபார்கள் என நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: இறுதிகட்ட பணியில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்!