ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக நடிக்கும் படம் என்ஜிகே. இ்ப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, சூர்யா, செல்வராகவன், சாய்பல்லவி, யுவன்சங்கர் ராஜா, எடிட்டர் பிரவின் கே.எல் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.
விழாவில் இயக்குநர் செல்வராகவன் பேசுகையில், “என்ஜிகே ரொம்ப கஷ்டமான ஸ்கிரிப்ட். இந்த படத்திற்கு சூர்யாதான் சரியாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். சூர்யா மிகவும் அற்பதமான நடிகர். ஆக்ரோஷம், அன்பு, காதல் என அனைத்து பாவணைகளும் நடிப்பில் அழகாகக் கொடுக்க கூடியவர். இந்த படத்தை அவரின் ரசிகன் என்கிற முறையில்தான் இயக்கினேன்.
ஷூட்டிங்போது பல டேக் போனாலும் அசராமல் நடித்து கொடுப்பார். ஒரு சில நேரத்தில் நானே நல்லா இருக்கு என்று சொன்னாலும், இன்னும் நன்றாக பண்ணலாம் என்று விடமால் நடித்துக் கொடுப்பார். தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து, இந்தப்படம் செல்வராகவன் படமாக இருக்க வேண்டும் என்று கூறியது பெரிய உற்சாகமாக இருந்தது. இப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகுகிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன், என்றார்.
அடுத்து பேசிய நடிகர் சூர்யா, “மனிதநேயத்தை பயங்கரவாதம் ஜெயித்து விடக்கூடாது. அரசியல் ரத்தம் சிந்தாத யுத்தம் என்று கூறுவாங்க. அதேபோன்று யுத்தம் ரத்தம் சிந்தும் அரசியல்னு சொல்லுவாங்க. செல்வா சாரின் கதையை அந்த மாதிரிதான் பார்க்கிறேன். இந்த படம் ஒரு பொலிக்டிக்கல் ட்ராமா அல்லது திரில்லரா மட்டும் இல்லை. செல்வாவின் அரசியல், ரசனை, டச் எல்லாமே இருக்கும். படத்திற்கான கதை வலுவாக இருந்ததால், அதற்கான நேரத்தை படம் அதிகமாக எடுத்துக் கொண்டது. ஒவ்வாரு நாளும் படப்பிடிப்புக்கு வரும்போது, புதிய படத்திற்கு செல்வது போன்றுதான் உணர்ந்தேன். புது வேலை செய்கிற மாதிரி இருந்தது. தினம் தினம் கத்துக்க முடிந்தது. செல்வா மீது அளவு கடந்த மரியாதை, காதலும் ஏற்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு பொது இடத்தில் இயக்குநர் செல்வராகவனை சந்தித்தேன். அப்போது உன்னுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று வாய்ப்பு கேட்டேன். அது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நனவாகியுள்ளது. காலத்தை கடந்து நிற்கும் பாடலை யுவன் கொடுத்திருக்கிறார். இப்போதும் மைக்கேல் ஜாக்சன் இசை ரசிக்கப்படுகிறது. அதேபோல், அடுத்த தலைமுறையும் ரசிக்கும் இசையை யுவன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். செல்வா படத்தில் யுவனின் இசை, ஸ்பெஷலாக இருக்கும். இவர்களுடன் சேர்ந்து நான் பணியாற்றியது மிகவும் சந்தோஷம்” என்றார்.