இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடிகர் அஜீத் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படம் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ’பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்காகும்.
இத்திரைப்படத்தில் அஜீத் நடிப்பு குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் மிரட்டியிருக்கிறார். விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காக மூன்று ஆக்ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்' என பதிவிட்டிருந்தார். இதனால் தல நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை நீத்து சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேர்கொண்ட பார்வை திரைப்படம் குறித்த போனி கபூரின் ட்வீட்டுக்கு, நடிகர் அஜீத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை சமாதானப்படுத்தி விரைவில் இந்தி திரையுலகுக்கு அழைத்து வாருங்கள். அந்த ஆக்ஷன் படத்தில் நானும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்' என பதிவிட்டுள்ளார்.