ஐசரி வேலனின் 33ஆவது நினைவு தினம், நடிகர் ஜே.கே ரித்தீஷின் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் சென்னை சத்யா ஸ்டூடியோஸில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், கல்வியாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் ராஜன், நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் நாசர், “நடிகர் சங்கம் கம்பீரமாக நிற்கிறது என்றால் அதற்கு காரணம் ஐசரி வேலன் மற்றும் ஐசரி கணேஷ்தான். அவருக்கு காலம் காலமாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்து வைக்கும் மாபெரும் கல்வி பணியை அவர் செய்துவருகிறார். நான் இந்த விழாவில் மூன்றாண்டுகளாக கலந்துகொள்கிறேன். இந்த விழா முக்கியமாகக் கருதப்படுவது தந்தைக்கு நிகரான தன் நண்பனை மரியாதை செய்கிறார் ஐசரி கணேஷ். நடிகர் சங்கத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜே.கே. ரித்தீஷ். மூன்று வருடங்கள் நாங்கள் பதவியில் இருப்பதற்கும் மிகப்பெரிய காரணமாக அவர் இருந்தார்” என்றார்.
இதனையடுத்து ஐசரி கணேசன் பேசுகையில், “நடிகர் சங்க கட்டிடத்தில்தான் எப்போதும் என் தந்தையின் நினைவு விழா நடைபெறும். தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் அங்கு நடைபெறவில்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற அந்த நிகழ்வில் எனது நண்பர் ஜே.கே ரித்தீஷ் பேசினார். ஆனால் இந்த ஆண்டு அவர் மறைந்துவிட்டார். அதனால் அவருக்கு இன்று நினைவு அஞ்சலி நடக்கும் நிகழ்வாகவும் இது நடைபெறுகிறது. அனைவருக்கும் மிகவும் உதவக்கூடிய மனம் உள்ளவர் ரித்தீஷ். அவர் மறைவு எங்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த வருத்தத்தை தெரிவிக்கும் வகையில்தான் அவருக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிச்சயமாக நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும். அதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உறுதியாக இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அது நல்லபடியாக செய்கின்ற நாசர் தலைமையிலான அணிக்கு எப்பொழுதும் நான் உதவியாக இருப்பேன். எனக்கு சங்கத்தில் பதவி தேவையில்லை. என்ன உதவி தேவையோ அதை நான் வெளியில் இருந்து செய்வேன்” என்றார்.