ஹிப்ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் நடித்தவர் ஆனந்த். தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக தயாராகவுள்ளது.
குமாரவேல், டயானா வைஷாலினி, லீலா, ஆனந்த், பவானிஸ்ரீ, ஆர்.ஜே. விஜய், பூர்னேஷ், வில்ஸ்பட், இஃப்ரான் என ஏராளமான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதுகுறித்து இயக்குநர் ஆனந்த் கூறுகையில், "எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நிஜ வாழ்க்கையில் முழு மனதுடன் நட்பை மதித்து நண்பர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அவர் இதை வெளியிட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
இந்தப் படம் நட்பு குறித்த கதை. நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். இப்படம் ஒவ்வொருவரையும் அவர்களது நண்பர்களை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும்" என்று கூறினார்.