சென்னை: அக்கா பவதாரிணி இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடலை தனது யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.
நடிகர் அபி சரவணன் - வெண்பா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாயநதி'. இந்தப் படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசியதாவது:
படத்தின் இசை அமைப்பாளர் பவதாரிணி, இவரின் இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. பாடலை வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் பவதாரிணி போட்டுக் காட்டவில்லை.
இசை எங்கள் ரத்தத்தில் இருக்கிறது. நான் இசையமைப்பாளர் ஆவதற்கு பவதாரணி அக்காதான் காரணம். சிறுவயதில் என் கை பிடிச்சி பியானோ வாசிக்க வைத்தது அவர்தான்.
இசையை நான் முழுவதுமாக படிக்கவில்லை ஆனால் எனது அக்கா கற்றுக்கொடுத்த அடிப்படை இசை அறிவை கொண்டுதான் நான் தற்போது வரை படங்களில் இசையமைத்து வருகிறேன். என்னை இந்த அளவுக்கு கூட்டிட்டு வந்தது அக்காதான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்தப் படத்தின் டீஸரை பவதாரிணியின் சகோதரரும், இயக்குநருமான வெங்கட் பிரபு வெளியிட்டார். விடலை பருவ வயதில் நிகழும் காதலை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.