இயக்குநர் நேசமானவன் இயக்கத்தில் எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ் தயாரிப்பில்உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா இவர்களோடுஅறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடித்துள்ளனர்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் வழக்கமாக நடைபெறும் இசை வெளியிட்டு விழா போல் இல்லாமல் இப்படத்திற்காக உழைத்த டெக்னீசியன்கள், நடிகர் நடிகைகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவாக நடைப்பெற்றது.
இந்த விழாவில் நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும். வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப டைரக்டர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நான் வறுமையில் இருந்தபோது நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார். இதற்காக நான் அவருக்கு கடமைபட்டுள்ளேன்" என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜிஜி கூறியதாவது, “இந்த படம் என்னுடைய முதல் முயற்சி. படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்த படத்தை கமர்சியலாக எடுக்காவிட்டாலும், கலகலப்பாக நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியுள்ளோம். விநியோகஸ்தர்கள் எங்களைப் போன்றவர்கள் எடுக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளிவர உதவி செய்ய வேண்டும், என்றார்.
இயக்குநர் நேசமானவன் பேசும்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக நாங்கள் அழைக்கவில்லை. எங்களுக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் எங்கள் படத்தை திரையில் கொண்டு கொண்டு வரும் வினியோகஸ்தர்களையும் எங்களால் மேடையேற்றி கவுரவிக்க முடியாமல் போய்விடும்.
விழாவிற்கு வரும் பிரபலங்கள் பேசுவதால் படத்திற்கு ஒரு தியேட்டர் கிடைத்து விடாது. அங்கே வினியோகஸ்தர்களின் தயவுதான் நமக்கு தேவைப்படும். அதனாலேயே சிறப்பு விருந்தினர்கள் என யாரையும் அழைக்கவில்லை. படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களையும் மேடையேற்றி விருதுகள் வழங்கி இந்த விழாவை நடத்தியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.