த.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தத் திரைப்படமானது தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 2ஆம் தேதி வெளியானது.
அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து இத்திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இருப்பினும் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விரீயமான எதிர்விளைவுகளைத் தாங்குவீரா?
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழுவினர் மன்னிப்பு கேட்பதுடன், ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் எனவும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
அதில், "கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஜெய்பீம் திரைப்படத்தை சென்னை மினி தியேட்டரில் பார்த்தேன். தோழர்கள் ஆர்என்கே, முத்தரசன், மூவீ ஆகியோரோடு சென்றிருந்தேன். நடிகரும், கொங்கு மண்ணின் குணக்குன்றுமான சகோதரர் சிவக்குமார் அன்பு ததும்ப வரவேற்று உபசரித்தார்!
படத்தில் 'நடித்த' நடிகர்கள் அனைவரும் நடிக்கவே இல்லை! வாழ்ந்து காட்டினார்கள்! பல இடங்களில் கண்கள் கண்ணீர் குளமாயின! கலோனியல் போலீசின் 'குரூரத்தை' தத்ரூபமாக உரித்து வைத்த காவல்துறையினரின் நடிப்பை என்னவென்று சொல்வது? மனிதர்களை மிருகங்களாகப் பயிற்றுவித்துப்போன, ஆங்கிலேய காலனி அரசின் மீது கோபம் கொப்பளித்துக்கொண்டே இருந்தது!
பாராட்டி ஊக்குவிக்க வேண்டிய இந்தப் படத்தை, அழுகிப்போன மனநோயாளிகள் சிலர் எதிர்க்கிறார்கள்!? அந்த எதிர்ப்பின் பின்னால் பாஜக இருக்கிறது! சூர்யா வீட்டு முன்னால் 10 ஆயிரம் பேரைத் திரட்டுவார்களாம்! அவரை உதைத்தால் ஒரு லட்சம் கொடுப்பார்களாம்! இந்த இழிவான சீண்டல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்! எதிர்விளைவு வீரியமானதாக இருக்கும்! தாங்க மாட்டீர்கள்! தமிழ்நாடே சூர்யாவோடு நிற்கிறது!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சரை சந்தித்த விக்னேஷ் சிவன்! பின்னனி என்ன?