உலகம் முழுவதிலுமுள்ள ஹாலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று இரவு தொடங்கி நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 24 பிரிவுகளில் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்தப் பிரிவுகளில் வெல்லப்போகின்றன என உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்கள் இணையத்தில் கணிப்புகளை வெளியிட்டு, ஆஸ்கர் ஃபீவர் உச்சம் பெற்றிருக்கும் இந்தவேளையில், ஆஸ்கர் பந்தயத்திலுள்ள திரைப்படங்கள் குறித்து சிறு தொகுப்பைக் காணலாம்.
மேரேஜ் ஸ்டோரி:
அழகாகத் தொடங்கிய ஒரு திருமண உறவு, அது முறியும் காலச்சுழலில் சிக்கியுள்ள தம்பதியினர், அவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள், முக்கியமாய் விவாகரத்து வழக்குகளை ஏற்று நடத்தும் வழக்கறிஞர்கள் இவர்களைக் கையாளும் விதம், மன வேதனைகள் என இந்தத் திரைப்படம் நிகழ்காலத்தில் விவாகரத்தை எதிர்கொள்பவர்கள் அல்லது காதல் முறியும் கட்டத்திலுள்ளவர்கள் சந்திக்கும் சவால்களையும், மனவோட்டத்தையும் துல்லியமாக அலசுகிறது.
எதற்காகப் பார்க்கலாம்: காதலில் திளைத்து திருமணம் செய்த தம்பதியினரின் திருமண உறவு முறிவது குறித்து விமர்சனங்கள் பொதுவாக முன்வைக்கப்படும். இவர்கள் விவாகரத்திற்கு தள்ளப்படுவதற்கான காரணங்கள், விவாகரத்தின் பிறகும் அதே உயிர்ப்புடன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட நபர்களுக்கான காதலை அழகியலுடன் விவரித்து, உணர்ச்சிக்குவியலுக்கு உள்ளாக்கியதற்காகவே இந்தத் திரைப்படத்தை அவசியம் கண்டுகளிக்கலாம்.
விருதுகள் வெல்லக்கூடிய பிரிவுகள்: சிறந்த நடிகர், நடிகை, சிறந்தத் திரைப்படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தன் மணவாழ்வு, குழந்தை, வேலை இவற்றிற்கிடையே விவாகரத்தைச் சந்திக்கும் நடுத்தர வயது பெண்ணாய் திரையில் ஜொலித்து நடிப்பால் நம்மைக்கட்டிப்போட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சனும், பாஃப்டா, கோல்டன் க்ளோபைத் தொடர்ந்து லாரா டென் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் அள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
1917:
முதல் உலகப்போர் பதற்றத்தின் இடையே லான்ஸ் ஸ்கோஃபீல்ட் மற்றும் லான்ஸ் ப்ளேக் எனும் இரு பிரிட்டிஷ் வீரர்களிடம் எதிரிகளின் சதிவலையில் மாட்டியுள்ள தங்கள் சக 1600 போர் வீரர்களை, போரில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தி, உயிர் சேதத்தைக் காப்பாற்றும் பெரும் பணி ஒப்படைக்கப்படுகிறது. தங்கள் எதிரிகளின் பாதையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கும் இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை செய்து முடித்தனரா, 1600 வீரர்களுக்கு மத்தியில் ஒருவராய் சிக்கியுள்ள தன் சகோதரரை லான்ஸ் ப்ளேக் சந்தித்தாரா என்பதை, போர் உக்கிரத்திற்கு மத்தியில் படம் பிடித்துக்காட்டி, போர் ஏன் கூடாது என்பதையும் உணர்ச்சிகரமாய் விவரித்திருக்கும் திரைப்படம்.
எதற்காகப் பார்க்கலாம்: இரண்டரை மணி நேரத்தில் இப்படம் கடத்தும் தத்துவார்த்த பயண அனுபவம், போரின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி அறியாமல் போர்க்குரல் கொடுப்போர் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இத்திரைப்படம் அவசியமான ஒன்று.
விருதுகள் வெல்லக்கூடிய பிரிவுகள்:
சிறந்தத் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை உள்ளிட்ட பத்து பிரிவுகளில் இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 பிரிவுகளில் பரிந்துரைப்பட்டு ஆஸ்கர் விருதுகளில் பெரும்பான்மை மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தைப் பொருத்தவரை, சிறந்தத் திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்காக சாம் மெண்டிஸ் விருதைக் கைகளில் ஏந்தும் தருணத்திற்காக ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
ஜோக்கர்:
ஆர்தர் ஃப்ளெக்கைத் தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்கு ஜோக்கரைப் பற்றி ஏற்கனவே பெருமளவு அனைத்து ஊடங்களிலும் விவாதிக்கப்பட்டுவிட்டது. நகர வாழ்வின் தனிமை வெக்கையில், சரியான அங்கீகாரமற்ற, மன அழுத்தத்தில் சிக்கி, கோதம் நகர வீதிகளில் அலைந்துத் திரியும் கலைஞனாய் வகீன் ஃபீனிக்ஸ் ஆடியது ருத்ர தாண்டவம். வன்முறையைத் தூண்டுவதாய் ஒருபுறம் கடும் விமர்சனங்கள் படத்தை நோக்கிக் குவிந்தாலும், அதிகம் வசூலித்த ஆர் ரேட்டட் திரைப்படம் எனும் புதிய மைல்கல்லை எட்டி இந்த வருடம் தவிர்க்க முடியாதத் திரைப்படமாய் தன்னைத் தானே முன்னிறுத்திக் கொண்டுள்ளது ஜோக்கர்.
எதற்காகப் பார்க்கலாம்: நகர வாழ்வின் தனிமை, மன அழுத்தம், அதற்கான சமூகக் காரணிகள் குறித்து இப்படம் பேசினாலும், இதே கதைக்கருவை அணுகிய விதத்திற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், வகீன் ஃபீனிக்ஸ் எனும் நடிப்பு அசுரனுக்காக இத்திரைப்படத்தை நிச்சயம் பார்க்கவேண்டும்.
விருதுகள் வெல்லக்கூடிய பிரிவுகள்: ஹீத் லெட்ஜருடனான ஒப்பீடுகளையெல்லாம் தாண்டி, இவர் தான் இந்த வருடத்தின் சிறந்த நடிகர் என கண்களை மூடிக்கொண்டு இவரைக் கைகாட்டும் அளவுக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனதிலும் தனக்கான இடத்தைப் பிடித்துவிட்டார் வகீன் ஃபீனிக்ஸ். தவிர சிறந்த ஒப்பனை, இசை, சவுண்ட் மிக்ஸிங் என மொத்தம் பதினொரு பிரிவுகளில் பரிந்துரைப்பட்டு இந்த வருடம் அதிகப் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டத் திரைப்படமாக ஜோக்கர் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை மொத்தமாய் ஆக்கிரமித்துள்ளது.
ஃபோர்ட் Vs ஃபெராரி:
படத்தின் தலைப்பே விவரிப்பது போல் ஃபோர்ட் மற்றும் ஃபெராரி கார் நிறுவனங்களுக்கு இடையேயான கார்ப்பரேட் யுத்தம், இவர்களிடையே அங்கீகாரம் பெறாமல் அலைக்கழிக்கப்படும் துணிச்சலான கார் பந்தய வீரன் கேன் மைல்ஸ், இவருடன் இணைந்து ஃபோர்ட் நிறுவனத்திற்காக தன்னிகரற்ற பந்தயக் காரை உருவாக்க முனையும் அமெரிக்க கார் வடிவமைப்பாளரும், கேனின் நண்பருமான கேரல் ஷெல்பி எனப் படம் அழகாய் விறுவிறுப்பாய் திரையில் விரிவடைந்து, கார் ரேஸிங்கின் எனர்ஜியையும் உத்வேகத்தையும் அப்படியே கடத்துகிறது. உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் ரேஸ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காகப் பார்க்கலாம்: திரைப்படத்தின் ஒளிப்பதிவு, ரேஸிங்கை தத்ரூபமாக அதே புத்துணர்வு பொங்கத் திரையில் படம்பிடித்துக் காட்டிய விதத்திற்காகவும், என்றைக்கும்போல் க்ரிஸ்டியன் பேலின் நடிப்பை ரசிப்பதற்காகவும் நிச்சயம் திரையில் காணலாம்.
விருதுகள் வெல்லக்கூடிய பிரிவுகள்: மொத்தம் நான்கு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் சிறந்த எடிட்டிங்கிற்கான விருது பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.