நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன. தொடர்ந்து கரோனா தொற்றால் திரையுலகப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்கிறது. முதல் அலையில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலருக்கு கரோனா வந்தது போனது.
ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. துயரோடு அதிகப்படியான அச்சமும் கலந்தே இருக்கிறது. விழிப்புணர்வும் தைரியமும் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.