தமிழில் 'அனேகன்', 'கடாரம் கொண்டான்', ஆகிய படங்களில் நடித்தவர் லெனா. இவர் மலையாள சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குநர் லெனின் பாலகிருஷ்ணன் இயக்கி வரும் 'ஆர்டிகல் 21' படத்தில் தாமரை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் லெனா, மது அருந்துதல், புகைப்பிடித்தல், பான்பராக் போன்றவற்றை பயன்படுத்தும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது பழைய பேருந்தில் வசித்து வரும் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் நிவின் பாலி, இயக்குநர் லால் ஜோஸ் உள்ளிட்டோர் தங்களின் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். வாக் வித் சினிமா சார்பாக, ஜோசப் தனூப், பிரசன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
கோபி சுந்தர் இசையமைக்கிறார். இதில் ஜோஜூ ஜார்ஜ், அஜூ வர்கீஸ், பினீஷ் கோடியேரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 'எந்த ஒரு நபரும் தனது வாழ்கை, தனிமனித சுதந்திரத்தை இழக்கக்கூடாது. வாழ்வது என்பது பிழைப்பை மட்டும் குறிப்பது அல்ல' என்ற இந்த கருத்தை மையமாக வைத்து 'ஆர்டிகல் 21' உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.