கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இதனையடுத்து, மோகன்லால் மலையாள திரையுலகின் சீனியர் நடிகைகளான கவியூர் பொன்னம்மா, ஜே. பி. எஸ். லலிதா, காலடி ஓமண்ணா, டி.ஆர். ஓமண்ணா, 'செம்மீன்' ஷீலா, ஊர்வசி, சாரதா ஜெயபாரதி, உஷாராணி போன்றவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நலம் விசாரித்துள்ளார்.
இந்தச் செயல் அனைத்து நடிகைகளுக்கும் மலையாளத் திரையுலகிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மலையாள இயக்குநர் சங்கர் நாயரின் மனைவியும் நடிகையுமான உஷாராணி கூறுகையில், "மலையாளத் திரையுலகில் நடிப்பிற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் சகோதரர் மோகன்லால் , நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், எங்களைப் போன்ற நடிகைகளை ஞாபகம் வைத்து பேசியது மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவதோடு அமைதியையும் கொடுக்கிறது.
இதுபோன்ற செயல்களால் தான் மோகன்லால் மலையாள சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு இறைவன் அருளாசி கிடைக்க வேண்டுகிறேன்" என்று கூறினார்.