சென்னை: திரைத் துறையினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு நடிகர் ரஜினி காந்திற்கு அறிவித்துள்ளது. இதையொட்டி, திரைத் துறையினர், பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் ரஜினி காந்திற்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
"ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட இந்த விருது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டியே வழங்கப்பட்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களின் வாக்குகளைப் பெறவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது" என எதிர்க்கட்சியினர் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது அரசியல் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள ரஜினிகாந்தின் நண்பர் கமல் ஹாசன் வெளியிட்டிருக்கும் வாழ்த்துப்பதிவில் வாழ்த்துடன் ஏதோ உள்பொருளைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் எனது மனத்திற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 விழுக்காடு பொருத்தம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ள திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 விழுக்காடு பொருத்தம் என்ற இரண்டாவது வரி தற்போது பலரிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த வரி ரஜினிகாந்தின் அரசியல் பயணத்தை விமர்சிப்பதாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவற்றை இப்போது செய்யவில்லை எனில் எப்போதுமே முடியாது எனத் தெரிவித்த ரஜினிகாந்த் கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார்.
ரஜினி காந்தின் இந்த முடிவினால் தங்களின் வாக்கு வங்கியை எண்ணி கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட பல அரசியல் கட்சிகளும் இன்பமுற்றன.
ரஜினியால் திரையில் தோன்றுவதன் மூலம் மட்டுமே ரசிகர்களைச் சந்தோஷப்படுத்த முடியும். அவர் தொழில் திரையில் நடிப்பது மட்டுமே. அவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்பதை தற்போது உணர்ந்துள்ளதால் ரஜினிகாந்திற்கு இந்த விருது 100 விழுக்காடு பொருத்தமானது என்பதை கமல் ஹாசன் தனது பதிவில் குறிப்பிட்டதுபோல் தோன்றுகிறது.