தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா. தனது தாய் ராமாமிருதத்தைவிட்டு தந்தை பிரிந்தபோது கோபி சாந்தா 10 மாத கைக்குழந்தையாக இருந்தார். கோபி சாந்தாவோடு காரைக்குடிக்கு குடிபெயர்ந்த ராமாமிர்தம், வீட்டு வேலை செய்து அவரை படிக்க வைத்தார். வறுமை காரணமாக படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், தனது பன்னிரெண்டாவது வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் கோபி சாந்தா. நன்றாகப் பாடக்கூடிய கோபி சாந்தாவிற்கு நாடக இயக்குநர் திருவேங்கடம், 'மனோரமா' என்று பெயர் சூட்டினர்.
ஆண்கள் பெண் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் பெண்கள் திரைக்குப் பின்னால் இருந்து பின்னணி குரல் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். 1952ஆம் ஆண்டு" யார் மகன்" என்ற நாடகத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக மேடையேறினார் நடிகை மனோரமா. நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தன்னுடன் பணியாற்றிய எஸ்.எம்.ராமநாதன் என்பவரை தாயின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மனோரமாவை, சென்னைக்கு அழைத்த எஸ்எஸ்ஆர். கலைஞர் எழுதிய 'மணிமகுடம்’ நாடகத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். இந்த நாடகத்தில் நடிக்கவரும்போது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக குழந்தையுடன் சென்னைக்கு வந்தார் மனோரமா.
அறிஞர் அண்ணா எழுதிய 'வேலைக்காரி' , 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்', 'ஓர் இரவு' நாடகங்களில் அண்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். கருணாநிதி எழுதிய 'உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதியுடன் கதாநாயகியாக நடித்தார் . தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த மனோரமாவை, 1958இல் வெளியான மாலையிட்ட மங்கை படத்தின் மூலமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் கவிஞர் கண்ணதாசன்.
ஆணாதிக்கம் மிக்க தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகைக்கான தனித்த இடத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக நட்சத்திர சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவர் மனோரமா. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் 'கம்முனு கெட' என்று பொரிந்த கண்ணம்மாவும், நடிகன் திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்புவைவிட ஸ்கோர் செய்த பேபி அம்மாவும், சின்னக் கவுண்டரில் சிரித்துப் பயமுறுத்திய ஆத்தாவும், தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்.
செட்டி நாட்டுத் தமிழ், சென்னைத் தமிழ், செந்தமிழ், பிராமணத் தமிழ், கிராமத்துத் தமிழ் என வட்டார மொழிகளைப் பேசுவதில் மனோரமாவிற்கு உள்ள திறமை தனித்துவமானது. ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்ற பாடலை பிராமண வழக்கு மொழியிலும், ‘வா வாத்யாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டி நா உடமாட்டேன்’, ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ போன்ற பாடல்களை சென்னை வட்டார மொழியிலும் பாடிய மனோரமா, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என ஐந்து முதல்வர்களோடு நடித்த பெருமை உடைய இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் சுமார் ஆயிரம் நாடகங்கள், 1300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர். இதுதவிர காட்டுப்பட்டிச் சரித்திரம், அன்புள்ள அம்மா, தியாகியின் மகன், வானவில், ஆச்சி இன்டர்நேஷனல், அன்புள்ள சிநேகிதி, அல்லி ராஜ்யம், அவள், ரோபோ ராஜா, மனுஷி, வா வாத்தியாரே, டீனா மீனா உள்ளிட்ட ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது என விருதுகளை வாரிக்குவித்தவர் மனோரமா. வேதனைகளை தன்னுள் புதைத்து, தான் ஏற்ற கதாபாத்திரங்களில் நகைச்சுவை ததும்ப நடிப்பைத் தந்த உன்னதமான நடிகை மனோரமாவின் பிறந்த நாள் இன்று .