’அமைதிப் படை’க்கு முன் தமிழ் சினிமாவில் எவ்வளவோ அரசியல் படங்கள் வந்திருக்கலாம். அதற்குப் பின்னாலும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், அமைதிப் படை பேசிய வீரியமான அரசியலை வேறு எந்தப் படமும் பேசியதில்லை. அங்குதான் இயக்குநர் மணிவண்ணன் வென்றுவிட்டார். இன்று இயக்குநர் மணிவண்ணனின் பிறந்த தினம். அவர் குறித்த சிறிய தொகுப்பு.
லொல்லுக்கு பெயர்போன கோவையைச் சேர்ந்த மணிவண்ணன், தமிழ் சினிமாவில் 'அ' போட்டது இயக்குநர் பாரதிராஜாவின் கைகளால். ஸ்டூடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை கிராமத்திற்கு கொண்டுவந்த பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். மணிவண்ணனின் எழுத்துத் திறமையை கண்டுகொண்ட பாரதிராஜா, அவரது கைவண்ணத்தில் உருவான நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற கதைகளை இயக்கினார்.
ஆனால், எவ்வளவு நாள்கள்தான் கதைகளை எழுதுவதிலேயே இருப்பது என நினத்திருப்பாரோ என்னவோ, 1983ஆம் ஆண்டு நடிகர் மோகனை வைத்து ’கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை எழுதி இயக்கினார். படம் வெற்றிபெற, மீண்டும் மோகனை வைத்து ’ஜோதி’ என்ற படத்தை இயக்கினார். அதுவும் வெற்றிபெற 1984ஆம் ஆண்டு மட்டும் ஆறு படங்களை இயக்கினார். அதில் 24 மணி நேரம், நூறாவது நாள் ஆகிய இரண்டு படங்களும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கும் திரைப்படங்களாகும்.
அதனையடுத்து மணிவண்ணன் தெலுங்கு, தமிழில் முக்கிய இயக்குநருக்கான இடத்தைப் பிடித்தார். அவர் இயக்கிய ’முதல் வசந்தம்’ படம் மிகப்பெரிய வெற்றியடைய அதனை இந்தியிலும் சஞ்சய் தத்தை வைத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
க்ரைம் த்ரில்லர், காமெடி, குடும்பம், காதல் என இவர் கைவைக்காத ஜானர்களே (genre) இல்லை என்று கூறலாம். அன்றுவரை அவர் கை வைக்காத ஒரே ஜானர் தமிழ்நாடு அரசியல் மட்டுமே. நிஜ வாழ்க்கையில் சிறந்த அரசியலைப் பேசிய மணிவண்ணன், அரசியல் படங்களை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.
அதுவரை எவ்வளவோ அரசியல் படங்கள் வந்திருக்கலாம். ஆனால் ’அமைதிப் படை’ தமிழ் சினிமாவில் வந்த அரசியல் திரைப்படங்களின் பெஞ்ச்மார்க் ஆகிப்போனது. அவரது ஆஸ்தான நடிகரான சத்யராஜை வைத்து ‘அமைதிப் படை’ படத்தை இயக்கினார்.
அமாவாசையிடம் பேச்சுக் கொடுத்த மணிவண்ணன் ஆடி போனதைபோல், மக்களும் படத்தைப் பார்த்து மிரண்டு போனார்கள். சமகாலத்திற்கு மட்டுமல்ல, தற்போதைய அரசியல் சூழலுக்கும் பொருந்திப்போகும் கதைபோக்கு கொண்ட படம் அமைதிப் படை.
நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ எனக் கூறும் காட்சியில் மாறும் சத்யராஜை போல், இன்று பல அரசியல்வாதிகள் மாறுகிறார்கள், அண்ட்ராயரை துவைக்க தொண்டர்கள் சண்டையிடுவது, மக்களிடையே வெடிக்கும் சாதிக் கலவரம் என படம் பேசிய அரசியல் முக்கியமானது. மணிவண்ணன் சிறந்த இயக்குநர் மட்டுமே என்று பலர் எண்ணியிருந்த வேளையில், நடிப்பிலும் பட்டையைக் கிளப்பினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கலாய்க்கும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்க பெற்றவர் மணிவண்ணன். ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜிக்கு முன்னால் நாயகன் விஜய் பம்முவார். ஆனால் மணிவண்ணனோ மிக யதார்த்தமாக கோவை மக்களுக்கே உரிய லொல்லால் அட்டகாசப்படுத்துவார்.
பெட்டிக் கடைக்காரர், வீட்டு ஓனர், நண்பர், வில்லன், காதலுக்கு உதவியாளன், தந்தை என ஏராளமான வேடங்களை ஏற்று நடித்தாலும், மணிவண்ணனின் சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன சங்கமம், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படங்கள்.
சங்கமம் படத்தில் வரும் ஆவுடையப்பன் கதாபாத்திரம் அவ்வளவு எளிதான பாத்திரம் அல்ல. கலைஞர்கள் கோபத்தையும் பாசத்தையும் எந்தவித கட்டுபாடுமின்றி வெளிப்படையாக காட்டுவார்கள். அந்தப் படத்தில் மணிவண்ணன் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், அழிந்துவரும் கிராமியக் கலைகளை காப்பாற்றி வரும் கலைஞர்களின் சிறப்பை உணர்த்தியிருக்கும்.
அந்தப் படத்தில் மணிவண்ணன் நடிகர் வடிவேலுவை திட்டும் காட்சியில் வெளிப்படுத்திய நடிப்பு, கோட் அணிந்துகொண்டு கம்பீரமாக நடந்துவருவது, கிராமியக் கலையை தவறாகப் பேசுகையில் கொதித்தெழுவது என மணிவண்ணன் வெளிப்படுத்திய நடிப்பை யாரும் எளிதாகக் கடக்க முடியாது.
தொடர்ந்து மணிவண்ணன் உள்பட 10 இயக்குநர்கள் நடித்து வெளியான படம் ’மாயாண்டி குடும்பத்தார்’. நான்கு மகன்கள் இருந்தாலும் தாயின் அன்பைப் பெற முடியாத நான்காவது மகன் மீது மணிவண்ணன் காட்டும் அன்பு, மாற்றுத் திறனாளி சிங்கம்புலியிடம் அன்பாக உரையாடுவது, வீட்டிற்கு வந்த மருமகள்களிடம் சண்டையிடாமல் அறிவுரை கூறுவது, மகனுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவது, மகனுக்கு பெண் பார்க்கும் காட்சி என மணிவண்ணன் கிராமத்து அப்பாவாகவே வாழ்ந்திருப்பார்.
எதார்த்தம், கமர்ஷியல் என தமிழ் சினிமாவின் அத்தனை பக்கமும் சிக்சர் அடித்த மாஸ்டர் மணிவண்ணன் பிறந்த தினம் இன்று. அவர் மண்ணை விட்டு மறைந்தாலும், தன் கலையின் மூலம் பலர் மனதிலும் என்றும் வாழ்வார்.
இதையும் படிங்க: ’சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா’ - மக்கள் இயக்குநர் மணிவண்ணனை நினைவுகூறுவோம்!