கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல முக்கியத் திரைப்பிரபலங்களும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரபல டோலிவுட் நடன இயக்குநர் கிஷோர் ஷெட்டியை மங்களூரு நகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கிஷோர்குமார் போதைப்பொருள்களை மறைத்து வைத்திருந்ததாக அவரது கைது குறித்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் முன்னதாக பிரபுதேவா நடிப்பில் வெளியான ஏபிசிடி (ABCD) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கன்னடத் திரைப்பட நடிகைகள் ராகினி திவேதி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை அவர் முற்றிலுமாக மறுத்து, தனது பெயரை இவ்வழக்கில் உபயோகிப்பதை தவிர்க்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக, திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னடத் திரையுலகில் இருக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்த தனது வாக்குமூலத்தை மத்திய குற்றப்பிரிவினருக்கு அளித்துள்ளார். கன்னடத் திரையுலகில் குறைந்தது 15 பேர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்ததார்.
அவரது வாக்குமூலத்திற்குப் பின், கன்னடத் திரையுலகில் பல முக்கியப் பிரபலங்கள் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: 'நீங்கள் 'அந்த' மாதிரியான நடிகைதான்' - கமல் பட நடிகையை விமர்சித்த கங்கனா