சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த படம் மாநாடு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்றுடன் நூறாவது நாளை (#MANADU100) கடந்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் ‘துணிந்து இறங்கு’ என தட்டிக் கொடுப்பவர். அவ்வாறு துணிந்து இறங்கி செய்த படம் ‘மாநாடு’. இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

புதிய படங்கள் திரைக்கு வந்த நான்கு நாள்களில் திரையரங்கிலிருந்து படத்தை துரத்திவிடும் இந்நாட்களில் ‘மாநாடு’ தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது. வெற்றி என்பது சாதாரணமல்ல. பல நல்ல உள்ளங்களின் கூட்டு உழைப்பு என கூறியுள்ளார்.
தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி
இப்படம் 100 நாள்களை தொட காரணமான இயக்குநர் வெங்கட்பிரபு, சிலம்பரசன் TR, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், பிரேம்ஜி, உதயா, மஹத், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பஞ்சு சுப்பு, மனோஜ் கே பாரதி, அரவிந்த் ஆகாஷ், டேனி உள்பட அனைத்து நடிகர் நடிகைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், தொகுப்பாளர் கே.எல். பிரவீண், சண்டைப் பயிற்சியாளர் சில்வா, கலை இயக்குநர் உமேஷ் ஜே குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விளம்பர வடிவமைப்பு ட்யுனி ஜான் ஆகியோர் மாநாடு படத்திற்கு பலமாக நின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் பங்கு என்ன?
இரண்டு வருட கரோனா இடைவெளி யாவையும் தாண்டி தன்னோடு பயணித்த அன்பின் இளவல் சிலம்பரசன் இப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அதனால் மட்டுமே இது அசாதாரணப் படமாக மாறியது. உடல் எடை குறைத்து புதிய நபராக இப்படத்தில் தோன்றி மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் என்பதே உண்மை எனவும் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
மிக முக்கியமாக, மாநாடு படத்தின் வெற்றிக்காக உழைத்த எஸ்.ஜே. சூர்யாவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வெங்கட்பிரபுவின் அயராத உழைப்பும், இயக்கமும் ஒரு தெளிவான வெற்றியைத் தேடித் தந்துள்ளதாகவும், இவர்களால் இன்று மாநாடு நூறு நாள்களைத் தொடுகிறது எனவும் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா - யுஏஇ அரசு கௌரவம்!