மலையாளத்தில் 'ஆமென்', 'அங்கமாலி டைரீஸ்', 'ஈ.மா.யூ.', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் லிஜோ ஜோஸ் முக்கிய இடத்தை வகிக்கிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் கேரளத் திரையுலக வரலாற்றில் மிக முக்கியப் படங்களாக மாறியுள்ளன. இவர் கடைசியாக இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் பாராட்டுகளைக் குவித்தது. ஹரீஷ்.எஸ் எழுதிய 'மாவோயிஸ்ட்' என்ற சிறுகதையின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சபுமோன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு கிராமத்தில் மாமிசத்திற்காக எருமை மாட்டை வெட்டும்போது அது தப்பித்து ஓடிவிடுகிறது. அதனை அந்த மக்கள் பிடிக்கும் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பாகத் தேர்வாகியுள்ளது. இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்தப் படத்தை தேர்வு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு 'தி டிஸைபில்', 'ஷகுந்தலா தேவி', 'ஷிகாரா', 'குஞ்ஜன் சக்ஸேனோ', 'ஜல்லிகட்டு', 'சப்பாக்' உள்ளிட்ட 27 படங்கள் அனுப்பட்டன. இதில் இறுதியாக 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு மலையாளத்திலிருந்து 1997ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான 'குரு', 2011ஆம் ஆண்டு சலீம் குமார் நடிப்பில் வெளியான 'ஆதாமின்டே மகன் அபு' ஆகிய இரண்டு படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக 'ஜல்லிக்கட்டு' திரைப்படம் தேர்வாகியுள்ளது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு படக்குழுவினருக்கு மலையாளத் திரையுலகினர் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகினர் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் மணிரத்னம் முன்னதாக தனக்கு மிகப் பிடித்த இயக்குநர்களில் ஒருவராக லிஜோ ஜோஸ் பெல்லிசேரியைக் கூறியது குறிப்பிடத்தக்கது.