கரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளதார வீழ்ச்சியால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈஸ்டர், ரம்ஜான் ஆகிய பண்டிகை நாள்களில் மலையாள திரையுலகிலிருந்து ஏழு படங்கள் வெளியாக இருந்தன. கிட்டத்தட்ட 26 படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனையடுத்து மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ”இந்த நிலைமையில் இருந்து நாம் எப்போது இயல்பான நிலைமைக்கு திரும்புவோம் என்று தெரியவில்லை. தேசிய ஊரடங்குக்கு பின் தொழில் முன்னேற வேண்டுமானால் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது சம்பளத்திலிருந்து 50 விழுக்காடுகளை குறைக்க வேண்டும். அப்போதுதான் நாம் இந்த நிலையிலிருந்து மீண்டு வரமுடியும்” என்று கூறியுள்ளது.
விரைவில் தயாரிப்பாளர் சங்கம் தொழில் நுட்ப கலைஞர்கள், பிரபலங்களை சந்தித்து இது குறித்து பேச உள்ளனர். தற்போது மலையாள சினிமாவை பொறுத்தவரை மோகன் லால், மம்மூட்டி, திலீப், பிருத்விராஜ் உள்ளிட்டோர் அதிக சம்பளம் வாங்கும் வரிசையில் உள்ளனர்.