ஹைதராபாத்: பழங்குடியின மாணவர்களின் கல்வி உயர்வுக்கு மாளவிகா மோகனன் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கரோனா சூழலில் சக மனிதர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை அனைவரும் செய்து வருகின்றனர். மாளவிகா மோகனன் தனது பங்களிப்பாக பழங்குடியின மாணவர்களின் கல்வி உயர்வுக்கு உதவ முன்வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், 2015ஆம் ஆண்டு வயநாடு அருகே உள்ள பழங்குடியின மக்களை சந்தித்தேன். அங்குள்ள மாணவர்கள் கல்வியறிவு பெறுவது அவசியமானது. அது அவர்களின் வறுமையைப் போக்கி நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவும். அவர்களின் அடிப்படை சுகாதார வசதியும், கல்வியும் மோசமான நிலையில் உள்ளது.
வயநாடு பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக நான் நிதி திரட்ட முடிவு செய்துள்ளேன். இங்குள்ள ஓடப்பள்ளம் உயர்நிலைப் பள்ளி பழங்குடியின மாணவர்களுக்கு மொபைல், லேப்டாப் தேவைப்படுகிறது. கரோனா சூழலில் ஆன்லைனில் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர். 22 பழங்குடியின இனத்தை சேர்ந்த இம்மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கும் நிதியின் மூலம் ஒரு பழங்குடிக்கு 1 லேப்டாப், 1 மொபைல் போன் வாங்கித்தர முடியும். இதன்மூலம் 221 மாணவர்கள் பயன்பெறுவர்.
அனைவருக்கும் ஒரு லேப்டாப், ஒரு மொபைல் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு, ஆனால் தற்போதைக்கு இதை அவர்கள் பகிர்ந்துகொள்வதே சிறந்ததுதான். உதவி செய்ய முன்வரும் நல்ல இதயங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.